பொங்கல் பெருவிழா

இயற்கைக்கு நன்றி கூறும் தமிழர் திருநாளான "பொங்கல் பெருவிழா", இயற்கை எழில் கொஞ்சும் மேக்நா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 13.01.2026 செவ்வாயன்று உற்சாகமும் உவகையும் தளும்ப இனிதே கொண்டாடப்பட்டது.

பல்வேறு கலைப் போட்டிகள், எழுச்சிமிகு சிறப்புரை, உற்சாக ஆட்டம் பாட்டம் என பேரெழில் பூண்டது, இப்பொங்கல் விழா.

மேக்நா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிறுவுநர் மற்றும் தலைவர் மதிப்பிற்குரிய திரு நாயகம் தேவதாஸ் அவர்கள், கல்லூரியின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய திருமதி ரூபி தேவதாஸ் அவர்கள், கல்லூரி முதல்வர் மதிப்பிற்குரிய முனைவர் ஜெயச்சந்திரன் அவர்கள், கல்லூரியின் இயக்குநர் மதிப்பிற்குரிய திரு ஜெர்ரி பிரசாந்த் அவர்கள் என அனைவரும் நிகழ்வைத் துவங்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளை பரிமாறினர்.

காலை பத்து மணியளவில் உறியடி, கயிறு இழுத்தல், கோலம் இடுதல் உள்ளிட்ட போட்டிகளோடு பொங்கல் கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கியது.

மாணவர்கள் ஆர்வமுடனும், மாணவியர் எவ்விதத் தயக்கமும் இல்லாமலும் உறியடி, கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியமை பெரும் வியப்பைத் தந்தது.

கல்லூரி சார்பில் "பெரும் பானையில்" பொங்கல் இட்டனர். அதோடு கலை அறிவியல் துறை மாணவர்கள் தங்களின் பேராசிரியர்களோடு இருகுழுக்களாக பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். சூரியனுக்கும் இயற்கைக்கும் பொங்கலைப் படையலிட்டு நன்றி கூறி மகிழ்ந்தார் நம் கல்லூரியின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய திருமதி ரூபிதேவதாஸ் அவர்கள்.

பொங்கல் விழாவிற்கு நம் கல்லூரியின் இயக்குநர் மதிப்பிற்குரிய திரு ஜெர்ரி பிரசாந்த் அவர்கள் தம் வாழ்வினையர் மதிப்பிற்குரிய திருமதி புஷ்ப யாழினி அவர்களுடன் பங்கேற்றது விழாவை மேலும் அழகாக்கியது.

கல்லூரி மாணவர்கள், தமிழர்தம் மரபான சேலை, தாவணியில் அழகிய தமிழ் மகள்களாகவும், வேட்டியில் அழகிய தமிழ் மகன்களாகவும் தோற்றத்தில் நம் மனங்களை கொள்ளையிட்டனர்.

பதினோறு மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடனும், இறுதியாண்டு வணிகவியல் துறை மாணவியின் வரவேற்பு நடனத்துடனும் பொங்கல் விழாப் பேருரை ஆரம்பமானது.

கலை, அறிவியல் துறையை சார்ந்த முதல் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் "மக்கள் இசைப் பாடல்களுக்கு", மண்மனம் கமழும் நடனம் வழங்கினர்.

படைப்பாளர், தமிழ் ஆய்வாளர் மற்றும் ஆர்வலர், பெண்ணிய சிந்தனையாளர், இலக்கிய நடுவர், பேராசிரியர் எனப் பன்முகத் திறன் கொண்ட முனைவர் "ஆதிரா முல்லை" அவர்கள், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்தார். அவருடைய உரைவீச்சு சிறப்புரையாக மட்டுமின்றி, மாணவர்கள் உடனான இனிய கலந்துரையாடலாகவும் இருந்தது. இயல்புத் தமிழில் அமைந்த ஆதிரா முல்லை அவர்களின் அழுத்தமான, நம்பிக்கை நிறைந்த நற்கருத்துகள் நகைச் சுவையுடன் வெளிப்பட்டு மாணவ மனங்களை ஈர்த்தது.

"கனாக் கண்டேன்" எனும் பொருளில் சிறந்த கவிதையை வழங்கிய முதலாமாண்டு மாணவருக்கு தன் அன்பு நிறைந்த வாழ்த்துகளையும் ஆதிரா முல்லை அவர்கள், அள்ளித் தந்தார்.

பொங்கல் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

இப்பொங்கல் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாய் அமைந்தது, நிகழ்வின் இறுதியில் நடந்தேறிய "உற்சாக ஆட்டம் பாட்டமே" எனலாம்.

பன்னிசைப் பாடல்களுக்கு ஏற்ப மாணவ மாணவியர் தங்களின் உள்ளங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சி கொப்புளிக்க இன்ப நடனத்தில் திளைத்தனர்.

நிகழ்வின் நிறைவில் வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரேவதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

பொங்கல் பெருவிழாக் கொண்டாட்டத்தை கணியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திருமலை, தமிழ்த்துறையின் பேராசிரியர் இரா பகுத்தறிவு, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரேவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள் அனைவரும் நிகழ்வின் இறுதிவரை மாணவர்களை நெறிப்படுத்தினர்.

பொங்கல் கொண்டாட்டத்தால் நம் கல்லூரியின் விளையாட்டுத் திடலே வண்ணங்களால் நிரம்பித் தளும்பியது.

அகமும் முகமும் குளிர கல்லூரியின் துறைப் பொங்கல்

வணிகவியல் துறையின் தித்திக்கும் பொங்கல்...

கற்கண்டுக் கரும்பே தோரணமாய் வணிக மேலாண்மைத்(BBA) துறையின் பொங்கல்...

விதைகளில் உயிர்த்த அரிசியை அமுதாக்கும் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறையினர்

அடுப்பெரிய அனைவரின் அகம் குளிர - தமிழ்ப்பொங்கல்

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்"

(காண்போரை சிலையாக்கும் விரல்களின் வண்ணம் ) இரண்டாமாண்டு கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு மாணவிகளின் எழில் கோலம்

வேரின்றி நீரின்றி - முதலாண்டு வணிகவியல் மாணவியரின் கோலப் படையல்

அதிரடி கிளப்பிட உறியடி...

முதலடியே சரவெடியாய் - இறுதியாண்டு வணிகவியல் மாணவர் V. முருகன்

உறியடியில் தடம் பதிக்கும் இறுதியாண்டு செயலாண்மை (B Com (CS) மாணவர் V. மெய்ஞானம்

சிங்கப் பெண்ணாய் உறியடியில் வென்ற மேலாண்மை இரண்டாமாண்டு (II BBA) மாணவி R. தன்ஷிகா

சிதறிய பாணை, சிலிர்த்த ஆடவர் - இறுதியாண்டு செயலாண்மை BCom (CS) மாணவி R. ராகவி

வலிமையும் எங்கள் அழகுதான்... கயிறு இழுக்கும் போட்டியில் எங்கள் கல்லூரி மேரிகோம்கள்

மோதத் தயாராகும் ஆடவர்...

தடை அதை உடை - உற்சாகமாய் மாணவர்கள்

இதயத்தை இதமாக்கும் - இறுக்கையை வசமாக்கும் , இசை நாற்காலிப் போட்டி

பொங்கல் பெருவிழாவை அழகூட்டிய சிறப்பு அழைப்பாளரும், மேக்நா கல்லூரி ஆளுமைகளும்...

நடனத்தால் வரவேற்ற இறுதியாண்டு வணிகவியல் மாணவி A. விஷ்னுப்பிரியா

சிறப்பு அழைப்பாளருக்கு கல்லூரியின் துணைத் தலைவர் மதிப்பிற்குரிய ரூபி தேவதாஸ் அவர்கள் பயனாடை அணிவித்தல்

சிறப்புரையாற்றும் கவிஞர் ஆதிரா முல்லை அவர்கள்

இமைக்கா நொடிகள் - விழாப் பேருரையை ஆழ்ந்து கேட்கும் மாணவர்கள்

அழகிய தமிழ் மகளாய் நடன விருந்தளித்த முதலாண்டு மாணவியர்

முதலாண்டு அழகிய தமிழ் மகன்களின் ஆர்பரிக்கும் ஆட்டம்

உற்சாகமும் உவகையும் பொங்க, கலைகட்டும் பொங்கல் பெருவிழா

சிறந்த கவிதைக்கு பரிசு பெறும் முதலாண்டு மேலாண்மை (I BBA) மாணவர் S. சாலமோன் பவுல்

உறியடியில் பரிசு வென்ற இறுதியாண்டு வணிகவியல் மாணவர் V. முருகன்

உறியடி வெற்றியாளர், இறுதியாண்டு செயலாண்மை மாணவர் V. மெய்ஞானம்

முதல் மாணவியாய் உறியடியில் வென்ற இரண்டாமாண்டு மேலாண்மை மாணவி R. தன்ஷிகா

உறியடியில் வென்ற இறுதியாண்டு செயலாண்மை மாணவி R. ராகவி

கோலப் போட்டியில் வென்ற இரண்டாமாண்டு கணினியியல் மாணவியர் V. கீர்த்தனா குழுவினர்

பொங்கல் விழாவின் அழியாத் தடங்களை பதிவாக்கும் drone உலா

பொங்கல் விழாவின் முத்தாய்ப்பாய் உற்சாக ஆட்டம் பாட்டம் (DJ)

உற்சாக ஆட்டம் பாட்டத்தில் திளைத்த மாணவியர்